விருதுநகர்
குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை
|தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டபணிகளில் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
ராஜபாளையம்,
தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டபணிகளில் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
நகரசபை கூட்டம்
ராஜபாளையம் நகரசபை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள குமாரசாமிராஜா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் பவித்ரா தலைமை தாங்கினார்.
இதில் துணை தலைவர் கல்பனா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட விவாதத்தின் போது காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் கணேஷ் எழுந்து முன்னாள் முதல்-அமைச்சர் பி.எஸ்.குமாரசாமிராஜா திருஉருவப்படத்தை சட்டமன்ற வளாகத்தில் திறக்க எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறார். அதே கோரிக்கையை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானமாக முன்மொழிகிறேன் என்றார். கவுன்சிலர் ராதாகிருஷ்ணராஜா அதனை வழிமொழிந்தார். இதையடுத்து தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-
ஞானவேல்:-
ராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டபணிகள் ஆகியவற்றில் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை. மீனாட்சி:- எனது வார்டில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
வீணடிக்க வேண்டாம்
தலைவர்:-
42 வார்டில் உள்ள பொதுமக்களும் எங்கள் வார்டு மக்கள் தான் என்ற உன்னதமான அடிப்படையில் தான் வளர்ச்சி திட்ட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். மற்றவர்கள் மீது பழிபோட்டு பேசி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் நகராட்சி சுகாதாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூபதி ராஜா கூட்டுறவு வங்கி தலைவரும், நகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ராஜாவுக்கு நகர்மன்றம் சார்பில் நகர் மன்ற உறுப்பினர் திருமலைக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.