திருவள்ளூர்
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
|சிறுவாபுரி,
சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று விடியற்காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர், மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் காலை 10 மணிக்கு சிறுவாபுரியில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி துர்கை சன்னதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்டவர்களை சுமந்த வண்ணம் "கந்தனுக்கு அரோகரா'' ''முருகனுக்கு அரோகரா'' என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பிய வண்ணம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று முருகன் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால், பன்னீர், தயிர் உள்ளிட்டவைகளை உற்சவருக்கு அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் டி.லட்சுமிநாராயணன் மற்றும் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இதைபோல பள்ளிப்பட்டு அருகே நெடியம் கஜகிரி மலை மேல் அமைந்துள்ள செங்கல்வராய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் காவடியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.