தஞ்சாவூர்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
|குவிந்து கிடக்கும் குப்பைகள்
அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
குடிநீர்- சாலை வசதி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிக அளவு பெருகிவிட்டது. ஆனால் மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாக காணப்படும் சாலைகளில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
துர்நாற்றம் வீசுகிறது
இந்த நிலையில் அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பை குவியல்களாக காட்சியளிப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கடல், குளம், குட்டை, கோவில்கள், பள்ளிகள், தபால் அலுவலகங்கள், குடியிருப்புகள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி உள்ளன. குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
கொசு உற்பத்தி
சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, விவசாய நிலங்கள் நிறைந்த இப்பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை குப்பைகளுக்கு இடையே உணவை தேடி அவற்றை கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்து உள்ளது.
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை காலேஜ் முக்கம் தொடக்கத்தில் இருந்து ஏரிப்புறக்கரை கடற்கரை பகுதி வரை ஆங்காங்கே அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மூக்கைப்பிடித்தபடி செல்ல வேண்டி உள்ளது.
ஊராட்சியில் குப்பைகளை தினந்தோறும் சரியான முறையில் சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க வேண்டும். அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து உடனடியாக குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.