நாகப்பட்டினம்
நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும்
|நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என நாகை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என நாகை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அனுசியா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
ராஜா:-கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொரவாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பன்றிகளை பிடிக்க வேண்டும்
தலைவர்:-நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ரூ.30 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மேம்பட்ட பகுதியாக இருக்கும்.
மணிவண்ணன்:- நாகை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து நெற்பயிர்களை சேதம் செய்கிறது. இதனால் விவசாயிகள் போதுமான இலக்கை எட்ட முடியவில்லை. எனவே பன்றிகளை பிடிக்க காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பாலமுருகன் (வட்டார வளர்ச்சி அலுவலர்):-குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் சீர் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும். பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து பன்றிகளை பிடிக்க ஆட்கள் கிடைக்கவில்லை என்றால் உறுப்பினர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பன்றிகளை பிடிக்க வருகிறோம் என்றனர்.
தலைவர்:-விவசாயிகளுக்கு தொல்லை தரும் பன்றிகளை பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.முடிவில் அலுவலக மேலாளர் சாரதா நன்றி கூறினார்.