கிருஷ்ணகிரி
அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
|தேன்கனிக்கோட்டை அருகே, கிராமத்துக்குள் செல்லாத அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் போலீசார் பேச்சுவார்த்தை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்டபிலி முத்திரை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் ஊருக்குள் செல்லாமல் அரசு டவுன் பஸ்கள் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், வியாபாரிகள் அருகே உள்ள நகரங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று கிராமத்துக்கு அருகே சென்ற ஒரு அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கிராமத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு பஸ்சை விடவித்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.