திண்டுக்கல்
போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு
|திண்டுக்கல்லில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2-ம் நிலை போலீசார், சிறைத்துறை, தீயணைப்பு, மீட்பு துறை உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 889 ஆண்களுக்கு மட்டும் திண்டுக்கல்லில் நடைபெறும் உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக 450 பேருக்கு உடல் தகுதி தேர்வு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. அதேபோல் பெண்களுக்கு திருச்சியில் நடைபெற்றது. அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 69 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 381 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலையில் சான்றிதழ், மார்பளவு, உயரம் சரிபார்ப்பு ஆகியவை நடந்தது.
அதையடுத்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளின் முடிவில் 341 பேர் மட்டுமே அனைத்திலும் வெற்றி பெற்று அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். மீதமுள்ள 40 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் 439 பேர் பங்கேற்க உள்ளனர்.
தேர்வில் பங்கேற்றவர்கள் செல்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களை மைதானத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அவற்றை போலீசார் வாங்கி பாதுகாப்பாக வைத்து, தேர்வு முடிந்ததும் திரும்ப ஒப்படைத்தனர்.