< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
19 July 2023 3:44 PM IST

தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மெட்ராஸ் பிரசிடென்சி மெட்ராஸ் மாகாணமாக மாறியது 1956 நவம்பர் 1-ந்தேதி மதராஸ் மாநிலம் உருவானது 1967 ஜூலை 18-ந்தேதி மெட்ராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட தினத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்படும் என்று 2021 சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு திருநாளாக தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இனி கொண்டாடப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு இணிணங்கவும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் வருகிற 23-ந்தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.

இதன் தொடக்கமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்வி துறையின் சார்பாக ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 13 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவி்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக தமிழ்நாடு நாள் உருவான வரலாறு மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், எம்.எல்.ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சி அரங்குகளை பள்ளி மாணவ- மாணவி்கள் தமிழ்நாடு நாள் குறித்த வரலாற்று சிறப்புகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து தமிழ்வளர்ச்சி துறை மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொ) பவானி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சா.உதயகுமார், பள்ளி துணை ஆய்வாளர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் குணாளன், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கீதா குமாரி, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்டர் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்