< Back
மாநில செய்திகள்
ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான  பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் வந்த டாக்டர் ஏற்கனவே திருமணம் ஆனவர்
தர்மபுரி
மாநில செய்திகள்

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் வந்த டாக்டர் ஏற்கனவே திருமணம் ஆனவர்

தினத்தந்தி
|
22 Jun 2022 12:15 AM IST

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுடன் ரெயிலில் வந்த டாக்டர் ஏற்கனவே திருமணமானவர் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் பெண் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெச்சல்லா ஆனி மரி (வயது 35). இவர் தனது நண்பரான டாக்டர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றபோது சேலம் மாவட்டம் காருவள்ளி அருகே ரெயிலில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார்.

அவருடைய உடல் தர்மபுரி ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஹரிசுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இவர்கள் இடையே உள்ள பழக்கம் ஹரிஷின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏற்கனவே தெரியுமா? அது தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

காலதாமதம்

இதுகுறித்து ஹரிஷின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையே ரெச்சல்லா ஆனி மரியின் இறப்பு குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அவருடைய சகோதரி மற்றும் உறவினர்களுக்கு தூதரகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உறவினர்களில் யாராவது வந்தால் அவர்களிடம் உரிய விசாரணை நடத்திய பின் ரெச்சல்லா ஆனி மரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தூதரகத்தின் முறையான அனுமதியை பெற்ற பின்னரே ரெச்சல்லா ஆனிமரியின் உறவினர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சேலத்துக்கு வர முடியும். இதனால் அவருடைய உறவினர்கள் சேலம் வருவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் வாய்ப்புஅதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஹரிசுக்கும் ரெச்சல்லா ஆனி மரிக்கும், முதன் முதலில் எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவர் பெங்களூருவில் இருந்து ரெயிலில் ஹரிசுடன் சென்றதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஹரிசிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்