< Back
மாநில செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் தற்கொலை; நடப்பு ஆண்டில் 3-வது சம்பவம்
மாநில செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் தற்கொலை; நடப்பு ஆண்டில் 3-வது சம்பவம்

தினத்தந்தி
|
2 April 2023 1:38 PM IST

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் வேளச்சேரியில் தங்கும் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேளச்சேரி,

இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையம் திகழ்கிறது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில், தொடர்ந்து முதல் இடம் பிடித்து வரும் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இருந்து சச்சின் குமார் ஜெயின் (வயது 32) என்ற மாணவர் சென்னை வேளச்சேரியில் அறை எடுத்து தங்கி உள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் துறையில் பிஎச்.டி. படிப்பு படித்து வந்த அவர் திடீரென தற்கொலை செய்து உள்ளார்.

அந்த மாணவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வாட்ஸ்அப் வழியே, வருந்துகிறேன். அதற்கு நான் சரியானவன் இல்லை என்று தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக சச்சினின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அதற்குள் சச்சின் தூக்கு போட்டு தற்கொலை செய்தபடி காணப்பட்டார். எனினும், அவரை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து உள்ளனர். அவரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதன்பின்பு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை போலீசார் கொண்டு சென்றனர். ஒரே ஆண்டில் ஏற்பட்ட 3-வது சம்பவம் இதுவாகும்.

சென்னை ஐ.ஐ.டி.யும் மாணவர் தற்கொலையை உறுதி செய்ததுடன், ஆய்வு படிப்பில் உள்ள மாணவர் ஒருவரின் இழப்பு, ஆராய்ச்சி சமூகத்தினருக்கு ஏற்பட்ட பேரிழப்பு என தெரிவித்து உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்து, சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவரான வைபு புஷ்பக ஸ்ரீசாய் (வயது 20) என்பவர் கடந்த மார்ச் 14-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, மராட்டியத்தில் இருந்து படிக்க வந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர்களில் ஒருவர் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்