ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி
|மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக சிஸ்டம் டெமான்ஸ்ட்ரேஷன் மாடல் (SDM) என்ற 'மாடூலிங்' என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக இங்கு நடந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் 3-வது கட்டமாக 1,703 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர்.
ஏற்கனவே முதல் கட்டமாக 724 வினாடிகளும், 2-வது கட்டமாக 324 வினாடிகளும் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.