2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கப்பாதை அமைக்கும் பணி நவம்பரில் தொடங்க திட்டம்
|மந்தைவெளி-திருவான்மியூர் இடையே பூமிக்கு அடியில் இருக்கும் மிகக் கடினமான பாறைகளை உடைத்து மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வருகிற நவம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை தொடர்ந்து, 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த 3 வழித்தடங்களில் 77.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்டத்திலும், 41.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்திலும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடம் முன்னுரிமை அடிப்படையில் அதாவது வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் பூந்தமல்லி-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான வழித்தடத்தில் உயர்மட்ட பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
பூமிக்கடியில் கடினமான பாறைகள்
அதேபோல், ராயப்பேட்டை-திருவான்மியூர் மற்றும் நாதமுனி-ரெட்டேரி வழித்தடங்களில் பூமிக்கடியில் சுரங்கம் தோண்டுவதற்கு முன்பாக மண் பரிசோதனை செய்தபோது, இந்த பகுதிகளில் பூமிக்கடியில் கடினமான பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான உயர்மட்ட பாதை பணிகள் திட்டமிட்ட காலத்தில் முடித்தாலும், சுரங்கப்பாதை பணியை முடிப்பதில் ஓர் ஆண்டு வரை தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு பூமிக்கடியில் உள்ள கடினமான பாறைகளும் முக்கியக் காரணமாக உள்ளது. பணிகளை வெற்றிகரமாக முடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
சவாலான பணிகள்
மாதவரம்-சிப்காட் சிறுசேரி வரை 3-வது வழித்தடத்தில் 26.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில், மாதவரம்-ராயப்பேட்டை வரை பூமிக்கு அடியில் பாறைகள் குறைவாகவும், ராயப்பேட்டை-திருவான்மியூர் வரை பாறைகள் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளன. அதில், மந்தைவெளி முதல் திருவான்மியூர் வரை மிக கடினமான பாறைகள் சில அடி ஆழத்திலேயே உள்ளன.
பொதுவாக, பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது பாறை, தண்ணீர் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில், நாதமுனி-கொளத்தூர் வரை பாதையில் நாதமுனி-ரெட்டேரி வரை 5.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரே மாதிரியாக பூமியில் சில அடி ஆழத்திலேயே பாறைகள் உள்ளன. இங்கு சுரங்கப்பாதை அமைக்க சுரங்கம் தோண்டும் எந்திரம் (டி.பி.எம்.) மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக, 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், சில இடங்களில் சுரங்கப்பாதை அமைப்பதில் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.
நவம்பரில் திட்டம்
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே அமைக்கப்படும் பணியில், இந்த பாதையில் உள்ள கோடம்பாக்கம் அடுத்து உள்ள பவுர்ஹவுஸ் பாதையில், மயிலாப்பூர் அருகே மிகப்பெரிய பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாப்பூர் முதல் கச்சேரி சாலை வரை பாறைகள் உள்ளன.
வருகிற நவம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் (டி.பி.எம்.) பணியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலமாக, ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 15 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படும். ஆனால், பூமிக்கடியில் பாறை இருந்தால், 4 முதல் 5 மீட்டர் வரை தான் தோண்ட முடியும். இந்த பாதைகளில் 8 சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு சில எந்திரங்கள் தற்போது சென்னையில் தயார் நிலையில் உள்ளன. பாறைகள் உள்ள இடங்களில் கூர்மையான பற்களை கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பயன்படுத்துவதுடன், புதிய சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பயன்படுத்தவும் ஒப்பந்ததரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காலதாமதத்திற்கு பல காரணங்கள்
முதல் கட்ட பணியின் போது அண்ணாசாலையில் பாறைகள் அதிகம் இருந்ததால் திட்டமிட்ட காலத்தில் பணிகளை முடிக்க முடியாமல் காலதாமதம் ஆனதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாறைகள் அதிகம் இருந்ததும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
ஆனால், சுரங்கப்பாதை பணி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுரங்கப்பாதையில் ரெயில்கள் செல்வதற்கும், வருவதற்கும் என்று தனித்தனியாக 2 பாதைகள் அமைக்கப்படும். இந்த இரண்டு சுரங்கத்தையும் இணைக்கும் வகையில் குறுக்குப்பாதை அமைப்பது வழக்கம்.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.