சென்னை
சென்னையில் 2-ம் கட்டத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளை இறையன்பு ஆய்வு
|சென்னையில் 2-ம் கட்டத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளை இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட காலத்துக்கள் திட்டத்தை முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம்கட்டத்தில், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் 118.9 கி.மீ. நீளத்துக்கு 3,4 மற்றும் 5 ஆகிய 3 வழித்தடங்கள் 128 மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2-ம் கட்டத்தில், மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான முதலாவது சுரங்கம் தோண்டும் எந்திரம் 'நீலகிரி', மொத்த நீளமான 1,400 மீட்டரில் 700 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் 'பொதிகை' மொத்த நீளமான 1400 மீட்டரில் 250 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான 3-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் 'ஆனைமலை' மொத்த நீளமான 400 மீட்டரில் 100 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான 4-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் 'சேர்வராயன்' சுரங்கம் தோண்ட செலுத்துவதற்கு தயாராக உள்ளது.
வேணுகோபால் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை இறையன்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கட்டுமான குழுவினருக்கு குறிப்பாக பணியிடத்தை ஒட்டிய சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு இறையன்பு அறிவுறுத்தினார். வழித்தடம் 5-ன் கீழ் உயர்த்தப்பட்ட தொகுப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
சுரங்கம் தோண்டும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும்படி இறையன்பு அறிவுறுத்தினார். சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் முன் பகுதிக்கு சென்று சுரங்கம் தோண்டும் எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதையும் அவர் கண்டறிந்தார்.
சுரங்கம் தோண்டும் எந்திரத்துக்குள் பணியாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மற்றும் வாயுக்களின் அளவு பற்றியும் அவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக், திட்ட இயக்குனர் தி.அர்ச்சுனன், உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.