< Back
மாநில செய்திகள்
எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் மருந்தாளுனர் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் மருந்தாளுனர் தற்கொலை

தினத்தந்தி
|
4 July 2023 7:41 AM GMT

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி மருந்து குடோனில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 53). இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராஜன் எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். தினமும் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார்.

இந்த நிலையில், நேற்று காலை முன்கூட்டியே 9 மணிக்கு வேலை வந்துள்ளார். பின்னர், மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு சென்றார். அங்கு காற்றாடி மாட்டுவதற்காக போடப்பட்டிருந்த கொக்கியில் திடீரென கயிற்றை மாற்றி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், 10.30 மணியளவில் சக ஊழியர்கள் மருந்து குடோனுக்கு சென்றார்கள். அங்கு ராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் இதுகுறித்து, எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

ராஜனின் பேண்ட் பையில் இருந்த கடிதம் சிக்கியது. அதில் 'இந்த முடிவுக்கு நானே காரணம்' என்று குறிப்பிட்டுவிட்டு தனது மனைவி மற்றும் மகள்களின் செல்போன் எண்களை எழுதி வைத்துள்ளார். இதேபோல, ராஜனின் தாய்க்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அவர் கடந்த சில வருடங்களாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

சிகிச்சை செலவுக்காக ராஜன், தனக்கு நெருங்கியவர்களிடம் லட்சக் கணக்கில் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதேபோல், ராஜனுக்கும் அடிக்கடி உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அவர் மனசோர்வுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் ராஜன் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்