திருப்பூர்
கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
|காங்கயம் அருகே கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
காங்கயம் அருகே கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
கல் குவாரிக்கு எதிர்ப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் காங்கயம் தாலுகா சிவன்மலை சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிக்கரசம்பாளையம், ஜீவாகாலனி, ராமபட்டிணம் ஆகிய கிராமங்களுக்கு அருகில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. விதிகளை மீறி சட்டத்துக்கு புறம்பாக அதிகமாக வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடிக்கிறார்கள். மாசு காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உபாதைகள் மக்களுக்கு ஏற்படுகிறது. பசுமை வளையம் அமைக்காமல் இயங்கி வருவதால் புகை மாசு குடியிருப்பு பகுதிகளில் தங்கி பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
வெடி அதிகம் வைப்பதால் வீட்டு சுவர்கள் விரிசல் விட்டு பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் பருகும் தண்ணீரும் வீணாகி வருகிறது. கிணற்றின் சுற்றுச்சுவர் சேதமடைகிறது. கல் குவாரியின் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கல் குவாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள சிவன்மலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
குட்டை ஆக்கிரமிப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், 'திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அடிப்படை வசதிகள், ஆவண பராமரிப்பு, கழிப்பிட வசதி ஆகியவற்றை வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த பொது ஆய்வில் சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள், விவசாய சங்கத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பு குழுவினர் இடம்பெறுவார்கள்' என்று கூறியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை உள்ளிட்டவர்கள் அளித்த மனுவில், 'பல்லடம் நகரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மூங்கில் குட்டை அமைந்துள்ளது. பல்லடம் பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆழ்குழாய் கிணறு அமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மூங்கில் குட்டை வீடுகள் கட்டியும், கழிவுநீர் தேங்கியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. எனவே குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
புகை பரிசோதனை கட்டணம்
மக்கள் வழிகாட்டி இயக்கத்தினர் அளித்த மனுவில், 'பொங்கலூர் ஊராட்சி என்.என்.புதூர் ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த மனுவில், 'திருப்பூரில் புகை பரிசோதனை நிலையங்களில் சான்று பெற நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே புகை பரிசோதனை சான்று பெறும் அலுவலகங்களில் கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.