மதுரை
மதுரை, சிவகங்கை மாவட்ட எல்லைகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீச்சு
|மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதிகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசியது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதிகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசியது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
சிவகங்கை மாவட்டம் கட்டமன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பானி. இவருக்கும், இவரது மருமகள் தேவி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில், உறவினர்கள் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசில் மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த மகாமுனி என்பவர் உள்ளிட்ட சிலர் சமரசம் பேச வந்துள்ளனர். இதில் மகாமுனிக்கும் சிலருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மகாமுனி மதுரைக்கு வந்துவிட்டார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மதுரை விராதனூர் பகுதியில் உள்ள மகாமுனிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் பெட்ரோல் குண்டை வீசினர். அதன் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்ற அவர்கள், அங்கு சிகரெட் வாங்கியுள்ளனர். அப்போது கடைக்காரர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும் பெட்டிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் பெட்ரோல் குண்டு கடையின் மீது விழுந்து தீப்பிடித்ததில் கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இதே கும்பல், கட்டமன்கோட்டை பகுதியை சேர்ந்த ஆதிக்கண்ணன் என்பவரது வீட்டிலும், கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
2 பேர் கைது
இந்த சம்பவங்கள் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் நடந்ததால், சிலைமான் மற்றும் திருப்புவனம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகாமுனி மற்றும் கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் சிலைமான் போலீசாரும், ஆதிக்கண்ணன் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசாரும் வழக்குபதிவு செய்து, அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பெட்ரோல் குண்டுகள் வீசியது, கட்டமன்கோட்டையைச் சேர்ந்த மாதவன் (வயது 20) மற்றும் பிரசன்னா (24) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.