விழுப்புரம்
எலக்ட்ரிக்கல் கடை, உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
|எலக்ட்ரிக்கல் கடை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் ரோசனை பகுதி முகமது நபி தெருவை சேர்ந்தவர் மன்னார் மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் மாரிசெட்டிகுள தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் மர்ம நபர் ராஜ்குமாரின் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசினார். பின்னர் முகமது நபி தெருவுக்கு வந்து அங்கிருந்த அவரது வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசினார்.
2 பேர் கைது
இதை பார்த்த பொதுமக்கள், அந்த நபரை மடக்கி பிடித்து, தர்மஅடி ெகாடுத்து ரோஷனை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ரோஷனை முனியன் தெருவை சேர்ந்த ராமு மகன் பிரவீன் என்கிற பிரவீன் குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும், ராஜ்குமாருக்கும், ரோஷனையை சேர்ந்த செல்வம் மகன் மணிமாறன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதில் மணிமாறன்(28) தூண்டுதலின்பேரில் பெட்ரோல் குண்டு வீசியதாக பிரவீன்குமார் போலீசில் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், மணிமாறன் ஆகியோரை கைது செய்தனர்.