< Back
மாநில செய்திகள்
தொடரும் சம்பவம்: கன்னியாகுமரியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மாநில செய்திகள்

தொடரும் சம்பவம்: கன்னியாகுமரியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தினத்தந்தி
|
25 Sept 2022 1:19 PM IST

கன்னியாகுமரியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல மாநிலங்களில் இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் 11 பேர் உள்பட நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்பட நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மத அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, பிஎப்ஐ அமைப்பு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய பின்னர் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கோவை, மதுரை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் மண்டைக்காடு அருகே கருமங்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

கல்யாண சுந்தரம் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சவுதி அரேபியா நாட்டில் வசித்து வந்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் வந்த கல்யாண சுந்தரம் கருமங்கூடல் ஊரிலேயே வாழ்ந்து வந்தார்.

சவுதி அரேபியாவில் பழைய பொருட்களை வாங்கி மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் தொழிலில் கல்யாண சுந்தரம் ஈடுபட்டு வருகிறார். மேலும், கன்னியாகுமரியில் இவருக்கு திருமண மண்டபம், தங்கும் விடுதி, வணிக வளாகம் உள்ளிட்டவை உள்ளன. இது தொடர்பான தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் கல்யாண சுந்தரத்தின் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. கல்யாண சுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாண சுந்தரம் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக கிடையாது. தொழிலதிபர் என்பதால் கல்யாண சுந்தரம் அனைத்து அரசியல் கட்சியினருடனும் நெருங்கிய பழக்கத்தில் இருந்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக என அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனும் கல்யாண சுந்தரத்திற்கு பழக்கம் இருந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழிலதிபர் கல்யாண சுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய நபர் யாரை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்