ராணிப்பேட்டை
நிலத்தகராறில் மேஸ்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
|ஆற்காடு அருகே நிலத்தகராறில் மேஸ்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 58), மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது உறவினரான அதேப்பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே நிலம் விற்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணனின் மகன் சேதுராமன் (27)், தங்கையின் கணவர் முனுசாமி மற்றும் உறவினர்கள் பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முரளி, பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரியில் தீ வைத்து கிருஷ்ணனின் வீட்டின் முன்பு வீசியதாக கூறப்படுகிறது. இதில் கிருஷ்ணனின் வீட்டின் முன்பு விழுந்த பாட்டில் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசில் கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தனர். அதேபோன்று முரளி கொடுத்த புகாரின் பேரில் சேதுராமன் கைது செய்யப்பட்டார்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.