< Back
மாநில செய்திகள்
என்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
மாநில செய்திகள்

என்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தினத்தந்தி
|
30 Jan 2023 2:14 AM IST

விக்கிரவாண்டி அருகே என்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42) என்ஜினீயர். இவர் சென்னையில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது உறவினரான கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி ஷீலா என்கிற ரஹமத் (53) குடும்பத்துக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர்.

கற்களை வீசி ரகளை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஷீலா, தனது மகன் வினோத்குமார் என்கிற உஸ்மான்(30) மற்றும் சிலருடன் ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பிற்பகல் 3 மணி அளவில் ஸ்ரீதர் வீட்டின் மீது கற்களை வீசி, ரகளையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து ஸ்ரீதர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள், ஸ்ரீதர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இந்த பெட்ரோல் குண்டு, வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்தது.

இதனிடையே சத்தம் கேட்டு ஸ்ரீதரும், அவரது சகோதரர் ஸ்ரீராமும் வெளியே வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிள்கள் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்