திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு - கடலூர் சட்டமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார்
|கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்,
புதுச்சேரி எல்லைப் பகுதியில் நல்லாத்தூர் என்ற தமிழக பகுதி உள்ளது. கடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்த ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திமுக நிர்வாகியின் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்டார். அவர் மண்டபத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் அந்த மண்டபத்தின் வாசலில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் இந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து உடனடியாக எம்எல்ஏ அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சால் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.