< Back
மாநில செய்திகள்
நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு

தினத்தந்தி
|
13 Aug 2023 5:04 AM IST

நாங்குநேரியில் முன்விரோதம் காரணமாக 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி நம்பிநகர் தம்புபுரத்தைச் சின்னத்துரை. இவருடைய மகன் வானுமாமலை (வயது 29). நேற்று மாலையில் இவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று வானுமாமலையின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினர்.

பின்னர் அருகில் உள்ள வானுமாமலையின் மாமனரான ராமையா வீ்ட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசிய கும்பல் தப்பி சென்றது. இதில் அந்த வீடுகளின் முன்புள்ள ஜன்னால் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் வீடுகளில் இருந்த சோபா, நாற்காலிகள் போன்றவை தீயில் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். வீடுகளில் எரிந்த தீயையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனே அணைத்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், நாங்குநேரி நம்பிநகர் தம்புபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் நவீன் (22) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக வானுமாமலை, ராமையா ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.

அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் வளர்த்து வந்த நாய் மாயமானது. இதற்கு வானுமாமலைதான் காரணம் என்று கூறி, நவீனின் தந்தை கண்ணன் வானுமாமலையை அரிவாளால் வெட்டினார். இதனால் வானுமாமலை தரப்பினர் கண்ணனின் தோட்டத்தில் உள்ள வேலி கற்களை உடைத்தும், மரங்களை வெட்டியும் சேதப்படுத்தினர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் கண்ணனின் மகன் நவீன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வானுமாமலை, ராமையா ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான நவீன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாங்குநேரியில் முன்விரோதம் காரணமாக 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்