புதுக்கோட்டை
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
|கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடந்திருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
பெட்ரோல் குண்டுவீச்சு
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. கவர்னருக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை.
சம்பந்தப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் திட்டம் தீட்டியதாக எங்களுக்கு தெரியவில்லை. தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் வேறு யாரோ சிலர் இந்த சதியை செய்திருக்கலாம் என்ற அடிப்படையிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
மனநோயாளி
கைது செய்யப்பட்ட நபர் மனநோயாளி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழகத்தில் பா.ஜனதாவால் கால் ஊன்ற முடியாது. அவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பா.ஜனதா வளராது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கினாலும் தமிழக மக்களிடம் எடுபடாது.
கவர்னர் குற்றம் சாட்டும்போது அதற்கு பதில் அளிப்பது எங்களின் கடமை. அதைத்தான் தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஒரு போதும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
வெறுப்பை தூண்டும் பேச்சு
தமிழகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் முதல் நபராக கவர்னர் உள்ளார். தி.மு.க. எப்போதும் கவர்னர் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது கிடையாது. கவர்னர் தான் ஊர் ஊராகச்சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.எதிர்க்கட்சியை போன்று கவர்னர் தான் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நாங்களே பெட்ரோல் குண்டு வீசும் சம்பவத்தை எப்படி அரங்கேற்றுவோம்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.