தேனி
வாக்குச்சாவடிகள் மறு வரையறை செய்ய மனுக்கள் கொடுக்கலாம்:அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்
|வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மனு கொடுக்கலாம் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகள் மறுவரையறை பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2024-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணிகள் மற்றும் நீக்கல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற பணிகள் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேலும் விரைவுப்படுத்த வேண்டும்.
வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி வரை வாக்குச்சாவடி மறு வரையறை பணிகள் நடக்கிறது. எனவே வாக்குச்சாவடி அமைவிடம் 2 கிலோமீட்டருக்கு மேல் இருத்தல், சிதிலமடைந்த நிலையில் வாக்குச்சாவடி இருத்தல், வாக்குச்சாவடியின் பெயர் மாறியிருத்தல், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் ஏதும் அமைந்திருத்தல் ஆகியவற்றை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வருகிற 22-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், நவம்பர் 4, 5-ந்தேதிகள் மற்றும் 18, 19-ந்தேதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, தேர்தல் பிரிவு தாசில்தார் சுகந்தா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.