பெரம்பலூர்
இலவசமாக மனு எழுதி கொடுக்கப்பட்டது
|பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதி கொடுக்கப்பட்டது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு கட்டணம் வாங்கி சிலர் மனு எழுதி கொடுத்து வந்தனர். அதில் ஒருவர் கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது ஒரு பெண்ணிடம் மனு எழுதி கொடுக்க அதிக கட்டணம் வசூலித்தார். இது குறித்து செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 28-ந்தேதி வெளியானது. இதனை கண்ட கலெக்டர் கற்பகம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இனி வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் மனு எழுதி கொடுக்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களுக்கு பிரத்யேக அறையில் வைத்து மகளிர் சுய உதவிக்குழுவினர் இலவசமாக மனு எழுதி கொடுத்தனர். எழுதிய மனுவினை அவர்கள் ஒருமுறை படித்து காட்டி பொதுமக்களிடம் வழங்கினர். இலவசமாக மனு எழுதி கொடுக்க நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.