பெரம்பலூர்
நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
|போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் புரட்சியாளர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளா் ரத்தினவேல், கட்சியின் வக்கீல் அணியின் மாநில துணைச் செயலாளர் சீனிவாசராவ், நகர செயலாளரும், கவுன்சிலருமான தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கள் சங்கத்தின் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து துன்புறுத்தும் நகர போக்குவரத்து போலீசாா் மீதும், பிற போலீசார் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களை தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.