தென்காசி
அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி அமைச்சரிடம் மனு
|சுரண்டை, கடையநல்லூரில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி அமைச்சர் பொன்முடியிடம் மனு கொடுக்கப்பட்டது.
கடையநல்லூர்:
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியிடம் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிகளில் 2 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் சுரண்டையில் உள்ள காமராஜர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரி இருபாலரும் பயிலும் கல்லூரி ஆகும். தற்போது கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரிக்கு போதுமான இடவசதி இருந்தும் கட்டிட வசதி இல்லை. எனவே புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் கல்லூரிக்கு கூடுதல் பாடப்பிரிவுகள் வழங்க வேண்டும்.
இதேபோல் கடையநல்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கும் போதுமான கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கல்லூரிகளுக்கும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.