திருச்சி
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு
|வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் பேரமைப்பு நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபாதை கடைகளுக்கு என பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் கடைகளை நடத்தி வருகிறார்கள். அதேபோல் திருச்சி மாநகராட்சி பகுதியிலும் நடைபாதை கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்து, அங்கு அவர்கள் வியாபாரம் செய்து கொள்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடைவீதி, நந்திகோவில்தெரு, தேரடிக்கடை வீதி, சின்னக்கடை வீதி உள்ளிட்ட ஒரு சில முக்கிய இடங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யக்கூடாது. மேலும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளும் இடம்பெற வேண்டும். எங்கள் தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே அவர்களுக்கு மாற்றுஇடம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இந்த பிரச்சினை தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிட வேண்டாம். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.