கரூர்
வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய கலெக்டர் அலுவலகத்தில் மனு
|வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கனிமவள கொள்ளையை தடுக்க குவாரிகளில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் டிரோன் கேமரா வைத்து குவாரிகளை கண்காணித்து அளத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ளதை தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வரவேற்கிறது. கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகமெங்கும் 2000 கல்குவாரிகள் அனுமதி பெற்றும், சுமார் 6000-க்கும் மேற்பட்ட அனுமதி முடிந்த கல்குவாரிகளும் உள்ளன. அனுமதி பெற்று இயங்கும் மற்றும் அனுமதி முடிந்த பெரும்பாலான கல்குவாரிகளும், சட்டவிரோதமாகவே அரசு விதிகளுக்கு புறம்பாக இயங்கி வருகின்றன.
இதனால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கனிமவளத்துறை ஆணையர் உத்தரவின்படி தற்போது வெளிமாவட்ட அதிகாரிகளை வைத்து கடந்த 23.6.2023 முதல் டிஜிட்டல் சர்வே கல்குவாரிகளில் நடத்த தொடங்கி உள்ளனர். டிஜிட்டல் சர்வேயை நிறுத்தக்கோரி கல்குவாரி மற்றும் கிரஷரை இயக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். கல்குவாரி முறைகேடாக இயங்குவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.