< Back
மாநில செய்திகள்
பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர்
மாநில செய்திகள்

பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

தினத்தந்தி
|
15 Sept 2023 11:57 PM IST

கரூர் சுங்ககேட்டில் குடோன் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தர வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி, அகில பாரத மக்கள் கட்சி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் சுங்ககேட் அருகில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பாளரிடம் விநாயகர் சிலைக்காக முழுத்தொகையையும் செலுத்திவிட்டோம். தற்சமயம் சிலை செய்யும் குடோனை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்ததை அறிந்து நாங்கள் சென்று கேட்டபோது, ரசாயன கலவையில் சிலை செய்யப்படுவதாக புகார் வந்துள்ளது, அதனால் சீல் வைத்ததாக கூறினர்.

பொதுமக்களிடம் ரசீது

விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தற்சமயம் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆய்வுகூடம் அறிக்கை கூட இல்லாமல் விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு உள்ளார்கள். கடந்த 4 மாதகாலமாக சிலை செய்து வந்துள்ளனர்.ஆனால் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் ஒரு இடத்தில் மட்டும் நெருக்கடி கொடுப்பது ஏன்?. நாங்கள் பொதுமக்களிடம் ரசீது கொடுத்து விழாவிற்கு நன்கொடை வாங்கி விழா ஏற்பாடு செய்த நிலையில், நன்கொடையாளர்களும் எங்களை தவறாக நினைப்பார்கள்.

சிலைகளை மீட்டு தர வேண்டும்

காவல்துறை அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக எங்களை அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரையையும் வழங்கினர். முக்கிய அதிகாரியான மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரி காலதாமதமாக ஆய்வு செய்தது ஏன்? மற்ற சிலை செய்யும் இடத்திற்கு ஆய்வு செய்யாதது ஏன்? இந்த ஒரு ஆண்டு மட்டும் நாங்கள் பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்