< Back
மாநில செய்திகள்
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர்
மாநில செய்திகள்

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

தினத்தந்தி
|
29 Nov 2022 12:16 AM IST

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

தேங்காய் சிரட்டைகளை எரிக்க கூடாது

கூட்டத்தில், கடவூர் தாலுகாவிற்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு பிடித்து சுமார் 50 டன் கொண்ட தேங்காய் சிரட்டைகளை இறக்கி உள்ளனர். பின்னர் அவற்றை எரித்து கரியாக மாற்றுவதற்கு எந்த அனுமதியில்லாமல் 40 அடிஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர்.

தேங்காய் சிரட்டைகளை எரிக்கும்போது செம்பியானத்தம், சிங்கம்பட்டி, தங்கமுத்துநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, மூச்சு திணறல் ஏற்படும். மேலும், நிலத்தடி நீர் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயத்தை ஆதரமாக கொண்ட இந்த பகுதியில் தேங்காய் சிரட்டைகளை எரித்தால் விவசாய நிலங்கங்கள் பாதிக்கப்படும். எனவே இதற்கு எந்த அனுமதியும் வழங்க கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மின்ேமாட்டார் வயர்கள் திருட்டு

மண்மங்கலம் அருகே உள்ள ஓடையூரை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பலர் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் வயல்களில் விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார்களின் வயர்களை மர்மநபர்கள் அடிக்கடி அறுத்து திருடி சென்று விடுகின்றனர். இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தும் உள்ளோம்.வயர்களை அறுப்பதால் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மின் மோட்டார் வயர்களை திருடுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்

சி.ஐ.டி.யூ. மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் அரசின் அனுமதியோடு மணல் அள்ளி உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு அளித்து வருகிறோம். இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறோம். தற்போது மாடுகளை பராமரிக்க சிரமபபட்டு வருகிறோம்.அதனால் மாவட்டத்தில் 2 குவாரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டதால் அப்பணிகள் முடங்கியது. தற்போது சகஜ நிலை ஏற்பட்டுள்ளதால் குவாரிகளை உடனடியாக திறந்து மாட்டுவண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி வழங்கியும், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்