கரூர்
100 நாள் வேலை கேட்டு கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
|கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 நாள் வேலை கேட்டு கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
100 நாள் வேலை
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 309 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 33 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.20,13,181 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், சிந்தலவாடி ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். 100 நாள் வேலை ஜூன், ஜூலை மாதம் மட்டும் தான் பார்த்தோம். இதுவரை 100 நாள் வேலை தரவில்லை. ஆகவே கூடிய விரைவில் தக்க நடவடிக்கை எடுத்து விரைவில் எங்களுக்கு 100 நாள் வேலை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய வீடு
கரூர் மாவட்டம், அப்பிபாளையம், கொக்கம்பட்டி, இந்திரா காலனியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- அரசாங்காத்தால் இலவசமாக கட்டி கொடுத்த தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்னதாக மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டுவீடு பழுதடைந்து விட்டது.
இந்த வீடு வசிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த கனமழையால் மேலும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் அபாயகரமான நிலையில் உள்ளது. போதுமான வேலை வாய்ப்பும், வருவாயும் இல்லாததால் புதிய வீடு கட்டிக்கொள்ள இயலவில்லை. ஆகவே பழுதடைந்த வீட்டை அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடு கட்டிக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சாக்கடை வசதி
தாந்தோணிமலை, ஜீவாநகர் கிழக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், ஜீவா நகர் கிழக்கு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் பகுதியில் மட்டும் சாக்கடை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக மிகுந்த சிரமத்தில் உள்ளோம். மேலும் சாக்கடை வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி இங்கு வாழும் மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. சாக்கடை நீரும், குடிநீரும் ஒன்றாக கலக்கும் அபாயம் உள்ளது. மேலும் வீடுகளில் கழிவுநீரை குழாய்கள் வழியாக கொண்டு செல்வதால் பல சமயங்களில் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் ஜீவாநகர் முதல் தெருவில் உள்ள சாக்கடை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. அதையும் சரிசெய்து, எங்கள் பகுதியில் புதிய சாக்கடை கட்டி அதில் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.