கரூர்
ஏமூர் கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு
|கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏமூர் கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 487 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மட்டும் 47 மனுக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து 22 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்
கூட்டத்தில் தென்னிலை பகுதிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:-தென்னிலை பகுதிக்குட்பட்ட மாமரத்துப்பட்டி, கீழ சக்கரக்கோட்டை, இளையபெருமாள்பட்டி, மஞ்சப்புள்ளிபட்டி ஆகிய கிராம பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களையும், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளையும் கடித்து வருகிறது. மேலும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நாய்கள் குறுக்காக அங்கும், இங்கும் ஓடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு வேண்டும்
புஞ்சை கடம்பங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் முத்துக்குமார் கொடுத்த மனுவில், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து மாட்டு கொட்டகை அமைத்து உள்ளனர். அதனை அகற்றிட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. எனவே சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், ஆக்கிரமிப்பு பணியின் போது போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஏமூர் கிராமம் மாரியம்மன் கோவில் தென்புறம் விவசாயம் செய்கின்ற பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் சுமார் 70 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் சாலை மற்றும் மின்விளக்குகள் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.