< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பள்ளி கட்டக்கோரி கலெக்டரிடம் மனு
கரூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பள்ளி கட்டக்கோரி கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
12 Sept 2023 12:20 AM IST

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பள்ளி கட்டக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 497 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 58 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 17 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 59 ஆயிரத்து 740 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பிரத்யேக பள்ளி வேண்டும்

மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 7 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு கரூர் மாவட்டத்தில் பிரத்யேகம் கொண்ட ஆரம்பப்பள்ளி முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும் அமைத்து தர வேண்டி நெடுங்காலமாக கோரிக்கைகள் பல வண்ணமாக வைத்துள்ளோம். இன்று வரையிலும் பள்ளி கல்வித்துறை செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. எங்கள் நீண்ட நெடுநாள் கோரிக்கையான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. எனவே கரூர் மாவட்டத்தில் எங்களின் எளிய கோரிக்கையை பள்ளி கூடத்திற்காக பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் பஸ் நிறுத்தம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அரவக்குறிச்சி ஒன்றியக்குழு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ஒன்றியப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், தங்களது வேலை நிமித்தமாக கரூர், திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் வியாபாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்காகவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகிறார்கள்.

கரூர்-பழனி, கரூர்-திண்டுக்கல் (அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி) செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்களின் சேவை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை முடிந்து போகிறது. இப்பகுதியில் இருந்து கரூரோ அல்லது திண்டுக்கல்லோ செல்ல வேண்டுமென்றால் 1½ மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. இரவு நேரங்களில் பஸ் வசதியில்லாமல் மிகவும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி கரூர்-திண்டுக்கல் புறவழிச்சாலையில் அரவக்குறிச்சி பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக போலீஸ் நிலையம்

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்க துணை செயலாளர் சுப்ரமணியம் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-நங்கவரத்தை மைய பகுதியாக கொண்டு புதிதாக ஒரு போலீஸ் நிலையம் அமைத்து செயல்பாட்டிற்கு வரும் என முதல்-அமைச்சர் சட்டபேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.எனவே போலீஸ் நிலையம் வரும் வரை நங்கவரத்தில் ஒரு தற்காலிக போலீஸ்நிலையத்தை காலியாக உள்ள அரசு கட்டிடத்திலோ, வாடகை கட்டிடத்திலோ அமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்