அரியலூர்
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்க கோரி கலெக்டரிடம் மனு
|ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு தமிழக அரசு மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சை ருத்ரன் ஜல்லிக்கட்டு பேரவைத்தலைவர் இளையராஜா தலைமையிலான நிர்வாகிகள் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையுடன் மனு அளிக்க வந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் காளையுடன் செல்லக்கூடாது என கூறி நிர்வாகிகளை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி படி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் காளைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த காளை மற்றும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.