பெரம்பலூர்
இலவச வீடு கட்டி தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
|இலவச வீடு கட்டி தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தங்க.ரத்தினவேல் தலைமையில், அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வேப்பூர் ஒன்றியம், அத்தியூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டாஸ்மாக் கடை அமைந்தால் கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அத்தியூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
புதிய தார் சாலை
ஆலத்தூர் ஒன்றியம், சிறுவயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராம மக்கள் சார்பில் பாலகுரு என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். பா.ஜ.க.வின் பெரம்பலூர் நகர தலைவர் சுரேஷ் தலைமையில், அக்கட்சியினர் கொடுத்த மனுவில், பெரம்பலூர் நகர்ப்பகுதியில் சேதமடைந்த சாலைக்கு பதிலாக புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
வேப்பந்தட்டை ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய பெண்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்து மனுவில், ஏழை, எளிய மக்களான எங்களின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 2005-ம் ஆண்டு முதல் போராடி, இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களால் உயர்நீதிமன்றத்தில் 3 முறை வழக்கு தொடரப்பட்டது.
இலவச வீடு
இது சம்பந்தமாக ஆதிதிராவிடர் நலத்துறை வழக்கை முடித்து, கலெக்டர் தலைமையில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார், சக ஊழியர்களால், கடந்த 10 ஆண்டுக்கு முன் பட்டா வழங்கப்பட்ட 53 பேருக்கு இடம் அளந்து காட்டப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் அந்த இடத்தில் அரசு மூலம் இலவச வீடு கட்ட ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமுள்ளவர்களில் எங்களை போல் தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
கடந்த வாரம் மே தின அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நேற்று நடந்த கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 389 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக கடந்த மாதம் 24-ந் தேதி நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின்போது முதியோர் உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற விதவை உதவித்தொகை வேண்டி மனு அளித்த 3 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளி உதவித்தொகை வேண்டியும், ஊன்றுகோல் வேண்டியும் பெறப்பட்ட 2 மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.