பெரம்பலூர்
பணி வழங்கக்கோரிசெவிலியர்கள் கலெக்டரிடம் மனு
|ஐகோர்ட்டு உத்தரவின்படி பணி வழங்கக்கோரி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் லோகலெட்சுமி தலைமையில் செவிலியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் நிரந்தர தன்மையுடைய பணி ஆணையை வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இதேேபால் குன்னம் தாலுகா, நன்னை கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நல்லம்மாள் கொடுத்த மனுவில், நன்னை கிராமத்தில் மாவட்ட சர்வேயர் மூலம் நீர் நிலைகளை அளவீடு செய்து எவ்வித பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தார்.
கோவில் உண்டியல் திருட்டு
வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் உண்டியல் கடந்த 29-ந்தேதி திருட்டு போன சம்பவம் குறித்து சந்தேகப்படும்படியாக இருந்த மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையான 4 பேர் மீது வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் சார்பில் அவர்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த கோவிலில் உண்டியல் திருட்டு போயிருக்கிறது. தற்போது 2-வது முறையாக உண்டியல் திருட்டு போயிருக்கிறது. அந்த 4 பேரும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 276 மனுக்கள்
பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கார்த்திக் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், குரும்பலூர் பேரூராட்சி 7-வது வார்டில் மேல பிள்ளையார் கோவில் குப்பு ரெட்டி குளத்தில் தென்புற கரையில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டி பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தப்பகுதியில் உள்ள தெருக்களில் சிமெண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் கூட்டத்தில் 2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் படை வீரர் கொடி நாள் நிதியாக ரூ.5 லட்சத்துக்கு மேல் வசூல் செய்த பதிவுத்துறையினை பாராட்டி முன்னாள் படைவீரர் நல இயக்ககம் மூலம் வழங்கப்பட்ட வெள்ளி பதக்கங்களை பெரம்பலூர் மாவட்ட பதிவாளர் மீரா மொஹிதீனுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கி பாராட்டினார்.