< Back
மாநில செய்திகள்
ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
அரியலூர்
மாநில செய்திகள்

ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
4 Oct 2022 12:32 AM IST

ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அப்போது கடுகூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடுகூர் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் வரை எலக்ட்ரிக்கல், பிளீச்சிங் பவுடர் வாங்கியதாக முறைகேடு நடந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு காண்பிக்கப்படவில்லை, பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. மேலும் குடிநீர் வினியோகமும் முறை செய்யப்படுவதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கடுகூர் ஊராட்சியில் கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மணல் கடத்தல்

கீழையூர், மேலப்பழுவூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த மனுவில், கீழையூர், மேலப்பழுவூர் கிராமத்தில் மறவனூர் செல்லும் சாலையில் ஆண்டேரி, பாப்பான்குளம் ஏரி மற்றும் பூதங்காத்தான் ஏரியில் அரசு அனுமதியின்றி செம்மண் மற்றும் மணல் ஆகியவற்றை சிலர் கடத்தி விற்பனை செய்கிறார்கள். இதனால் எங்கள் கிராமத்தில் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் கீழே செல்வதால் விவசாயமும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குரும்பஞ்சாவடி குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், இந்த குடியிருப்பில் வசிப்பவர்களிடம் வீட்டு வரி வசூலித்து ரசீது வழங்க வேண்டும். கொள்ளிடம் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்