< Back
மாநில செய்திகள்
குழந்தைகள் காப்பகத்தில் தாய்ப்பால் வங்கி தொடங்கக்கோரி மனு
திருச்சி
மாநில செய்திகள்

குழந்தைகள் காப்பகத்தில் தாய்ப்பால் வங்கி தொடங்கக்கோரி மனு

தினத்தந்தி
|
25 April 2023 1:36 AM IST

குழந்தைகள் காப்பகத்தில் தாய்ப்பால் வங்கி தொடங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருவானைக்காவல் மாம்பழசாலை அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பராமரிப்பு குறைபாடு காரணமாக குழந்தைகள் இறந்தது மிகுந்த கவலைக்குரியதாகும். இங்கு பணியாளர் பற்றாக்குறை உள்ளது.

மேலும் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி இல்லை. இங்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தடையின்றி கிடைக்கும் வகையில் தாய்ப்பால் வங்கியை தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்போது உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவினை உருவாக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

495 மனுக்கள்

அரங்கன் பாதுகாப்பு பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சேது அரவிந்த் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைணவ குருமார்கள் பஞ்சாங்கம் படிப்பது, வேத விண்ணப்பம் செய்வது, ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை படிப்பது போன்ற கைங்கர்ய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பணிக்கு இடையூறாகவும், அவர்களை வெளியேற்றும் விதமாகவும் கோவில் அதிகாரி செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகளை கண்டித்தும், தொடர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாகவும், தமிழக அரசு அவரை இடம் மாற்றம் செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 495 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி சீராக வினியோகிக்கப்படுகிறதா, கழிப்பிட வசதிகள் மற்றும் மின்விசிறி சரியாக செயல்படுகிறதா? என்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்