அரியலூர்
கழிவுநீர் வடிகால் பணிகளை மீண்டும் தொடங்கக்கோரி மனு
|கழிவுநீர் வடிகால் பணிகளை மீண்டும் தொடங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
உபகரணங்களை சேதப்படுத்தினர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், மணக்குடி ஊராட்சியில் உள்ள பெரிய மணக்குடி கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் இருந்து மேலத் தெருவில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் பணியின்போது தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி, ஒரு கட்சி நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் சிலர் வடிகால் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்த உபகரணங்களை அடித்து சேதப்படுத்தினர். இதனால் கட்டுமான பணி தடைபட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, வடிக்கால் கட்டுமான பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சம்பளம் வழங்கவில்லை
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமையில் வந்த ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் அளித்த மனுவில், அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மே மாதத்திற்கான அரை மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். சம்பளத்திற்கான காசோலையை ஒப்பந்ததாரரிடம் கொடுக்க நகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலும் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், மனுக்களின் மீது உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.