பெரம்பலூர்
பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை மீண்டும் நடத்தக்கோரி மனு
|பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை மீண்டும் நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வர தொடங்கினர். ஆனால் கோவில்களில் வைக்க சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால், கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கும் சில மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் பக்தர்கள் காத்திருக்கும் சூழ்நிலை நிலவியது. சில பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணாமல் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் இந்து முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், கோவில் செயல் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படாமல் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது. ஆகம விதிமுறைப்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இது இந்து பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. சாமி சிலைகளை முழுமையாக பிரதிஷ்டை செய்து ஆகம விதிமுறைப்படி சிறுவாச்சூர் பெரியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை மீண்டும் நடத்த வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.