< Back
மாநில செய்திகள்
போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கை ரத்து செய்ய மனு
மதுரை
மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கை ரத்து செய்ய மனு

தினத்தந்தி
|
31 Aug 2023 3:11 AM IST

12 மணி நேர வேலை சட்டம் வாபஸ் பெறப்பட்டதால் போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து போராடிய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் செல்வா உள்ளிட்ட 26 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதிச்சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் பெரியார் பஸ் நிலையம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்களான மாணவர்கள் மீது மதுரை திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவசர, அவசரமாக மதுரை மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சினையும், வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழக அரசு அந்த சட்டத்தை திரும்ப பெற்றது. ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவசர, அவசரமாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. அரசே இந்த சட்டத்தை திரும்ப பெற்றுள்ளதால், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி இறுதி உத்தரவுக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்