பெரம்பலூர்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் துணை பதிவாளரிடம் மனு
|தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் துணை பதிவாளரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் செயலாளர் கணேசன் தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து துணை பதிவாளர் இளஞ்செல்வியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி எம்.எஸ்.சி. மற்றும் ஏ.ஐ.எப். திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை லாபகரமாக செயல்படுத்த இயலும் என்கிற இடங்களில் மட்டுமே திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதிவாளரால் மாநில நிர்வாகிகளின் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக நமது மாவட்டத்தில் அனைத்து சங்கங்களும், லாபம், நஷ்டம் பாராது ஏதாவது ஒரு பணியினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமேன இணைப்பதிவாளர் உத்தரவின்பேரில் சங்க செயலாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சங்கங்கள் பெறும் நஷ்டத்தை சந்திக்கக்கூடிய நிலை ஏற்படும் என்பது உறுதி. எனவே இதனை கைவிட கேட்டு கொள்கிறோம்.
மாநில அளவில் இதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்படப்போகும் கடும் நஷ்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் வருகிற 3-ந்தேதி இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களையும் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு சங்க பணியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்த தொடர் விடுப்பில் செல்ல இருக்கிறோம், என்று கூறப்பட்டிருந்தது.