< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

தினத்தந்தி
|
20 Sept 2023 12:26 AM IST

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கை.களத்தூா் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.

மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று மாவட்ட கலெக்டர் கற்பகத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கை.களத்தூர் 2-வது வார்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள நீர் வழி பாதையான அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தில் 2 பேருக்கு அரசு ஊழியர் ஒருவர் பட்டா மாற்றி கொடுத்துள்ளார். மேலும் தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து சில்லி சிக்கன் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மது பாட்டிலை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் உள்ள கைபம்பிலும், பொதுக்குழாயிலும் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏற முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். அந்தப்பகுதியில் நூலகத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் கலெக்டரிடம் கை.களத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை வருவாய்த்துறையினரும், போலீசாரும் அகற்றியதால், மீண்டும் அதே இடத்தில் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி வேண்டும், என்றனர்.

அதற்கு கலெக்டர் இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நீங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சென்று சந்தியுங்கள் என்று அவர்களிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியையும் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அவர் இந்த ஆண்டு விநாயகர் சிலையை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது. அடுத்த ஆண்டு அனுமதி தருகிறேன். மேலும் விநாயகர் சிலையை வைக்கும் இடத்தை பொது இடம் என்று அறிவித்து கம்பி வேலி போட்டு தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன், என்று கூறியதின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்