திருநெல்வேலி
பட்டுப்புழு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
|பட்டுப்புழு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மானூரை சேர்ந்த தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்க நிர்வாகி ஏசுராஜன் தலைமையில் விவசாயிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில், ''கடந்த 2022-ம் ஆண்டு பட்டு வளர்ச்சி துறை மூலம் காப்பீட்டு திட்டத்தில் உள்ள தொகையை அரசே முழுமையாக இலவசமாக செலுத்தியது. ஆனால் 2023-ம் ஆண்டுக்கான காப்பீட்டு திட்டத்துக்கு அரசாணைப்படி ரூ.290 விவசாயிகள் தனிப்பட்ட முறையில் கடந்த ஜூன் மாதம் பட்டுவளர்ச்சி துறையில் செலுத்தினோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பட்டுப்புழு முட்டை உற்பத்தியில் சில குறைபாடுகள் இருப்பதால், இறுதிகட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி அளவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே பட்டுப்புழு முட்டை குறைபாட்டை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீட்டுதொகை வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் அருகே மேலக்கரை கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சேகர் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ''மேலக்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமலிங்கம், நயினார்குளம் பால்பண்ணை பகுதியில் வந்த போது ஹாரன் அடித்ததால், அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் துரத்தி மேலக்கரை ஊருக்குள் வந்து அவரை சாதி பெயரை சொல்லி தாக்கி மிரட்டி உள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
மானூர் ம.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் கொடுத்த மனுவில், ''அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து செட்டிகுறிச்சி வடக்கு பகுதியில் 100 ஏக்கர் பாசன வசதி கொண்ட குளம் அமைந்துள்ளது. இந்த குளத்துக்கு மழைக்காலத்தில் தண்ணீர் வரும் கால்வாயில், நெல்லை -சங்கரன்கோவில் சாலை விரிவாக்கத்தின்போது உபரி மண் கொட்டி கிடப்பதால் குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. எனவே கால்வாயை சீரமைக்க வேண்டும்'' என்று கூறி உள்ளார். இதேபோல் பலரும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.