கரூர்
அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
|கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 711 மனுக்கள் பெற்றார். இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 65 மனுக்கள் பெற்றப்பட்டன.
பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 21 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 7 ஆயிரத்து 394 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அடிப்படை வசதி வேண்டும்
காந்திகிராமம் அருகே உள்ள எழில்நகர், தமிழ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தின் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எழில்நகர், தமிழ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 192 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர், கழிவுநீர் தொட்டி ஆகிய அடிப்படை வசதிகளை கடந்த 2 வருடங்களாக முறையாக அமைத்து தரவில்லை. இதனால் கழிவுநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிறைந்து சாலையில் ஓடுகிறது. இதனால் கொசு தொல்லையால் அவதிப்படும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிலங்களை கையகப்படுத்த கூடாது
கீழமாயனூர் முதல் மாயனூர் வரை உள்ள காவிரி கரையோர பாசன வசதி பெறும் விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி கரையோரம் பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். மாயனூரில் கட்டப்பட்டுள்ள கதவணையில் முழுமையாக நீர்த்தேக்கிய போதும் கூட எங்கள் நிலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அணையில் நீர் தேக்கினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி எங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. எங்களுக்கு விவசாயத்தை தவிர வேற எந்த தொழிலும் இல்லை. எனவே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
வீடு கட்டி தரவேண்டும்
குளித்தலை அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தனர். அவற்றில் தற்போது வரை வீடு கட்டவில்லை. இதனால் அந்த இடங்களை வேறு நபர்களுக்கு தர உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கொடுக்க கூடாது. தங்களுக்கே கொடுத்து அந்த நிலத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் மாயனூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கரையோரம் வசித்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் உரிய பண வசதி இல்லாததால் பலர் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் வீடு கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.