< Back
மாநில செய்திகள்
பாடாலூரில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பாடாலூரில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மனு

தினத்தந்தி
|
31 Jan 2023 1:24 AM IST

பாடாலூரில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடாலூர் கிராம ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வருவாய் அலுவலரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் அமைத்து வருகின்றனர்.

சுரங்கப்பாதை

இதனால் பாடாலூர் ஊராட்சியின் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கிழக்கு பகுதியில் உள்ள அவர்களின் காடுகளுக்கு செல்வதற்கும், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடம், வங்கி, கால்நடை மருந்தகம், பால் பண்ணை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவதற்கும் வசதியாகவும், விபத்துகளை தடுப்பதற்காகவும் பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்.

மேலும் கருப்பு கோவில் முதல் நெடுஞ்சாலை வரை கொண்டகார பாலம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலை முதல் நல்ல செல்வம் என்பவரது காடு வரை காளியாத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய குடிநீர் கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த மனுவுடன் குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கவுரவ விரிவுரையாளர்கள் மனு

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் ஏற்கனவே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வருவாய் அலுவலரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், அரசு கலை-அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தமிழக அரசு அரசாணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். உதவி பேராசிரியருக்கான மாநில தகுதித்தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

பண்ணை உபகரணங்கள் வழங்கல்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 168 மனுக்களை, மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றார். முன்னதாக அவர் பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட தொழில்நுட்ப சேவை மையம் சார்பாக பெரம்பலூர் மாவட்ட பட்டுப்புழு விவசாயிகள் 11 பேருக்கு மாநில திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், மத்திய பகுதி திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.10 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும் பண்ணை உபரகணங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினார்.

Related Tags :
மேலும் செய்திகள்