< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டக்கோரி மனு
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டக்கோரி மனு

தினத்தந்தி
|
9 May 2023 12:39 AM IST

பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டக்கோரி மனு அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம்:

பட்டா வழங்க வேண்டும்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், நாங்கள் வசிக்கும் இடம் குட்டை புறம்போக்கு அல்ல. வருவாய்த்துறை அதிகாரிகள் அதனை சரியாக அளவீடு செய்யாமல், நாங்கள் குடியிருக்கும் இடமும் குட்டை புறம்போக்கு என அளவீடு செய்துள்ளனர். ஆனால் குட்டை தனியாக உள்ளது. அதற்கும் நாங்கள் உள்ள பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் முறையாக செலுத்தி வருகிறோம். எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், ஆக்கிரமிப்பு என்று கூறி அதனை அகற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே கலெக்டர், எங்களின் நிலையை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நாங்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

புதிய வகுப்பறை கட்டிடம்

கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அளித்த மனுவில், கோவிந்தபுத்தூர் கிராமத்தில் கடந்த 1,924-ம் ஆண்டு கல்விக்கூடம் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1998-ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடமும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டிடமும் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. மேலும் புதிய அலுவலகம் கட்டுவதால் மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டு வருகிறது.

பள்ளி இருந்த இடத்தில் தற்போது புதிய ஊராட்சி அலுவலகம் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய ஊராட்சி அலுவலகத்தை மாற்று இடத்தில் கட்ட ஆவண செய்வதோடு பள்ளி இருந்த இடத்தை பள்ளி பயன்பாடுகளுக்காக தந்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும். மேலும் பள்ளியின் 2 வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டதால், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லை. எனவே பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் நூலகம் கட்டித்தர ேவண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் கூட்டத்தில், திருமண நிதி உதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 417 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவை குறித்து உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்