கோடநாடு வழக்கில் விசாரணை ஆவணங்களின் நகல் கேட்டு மனு: ஊட்டி கோர்ட்டு புதிய உத்தரவு
|குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரே நகல் வழங்க முடியும் என்று ஊட்டி கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி கொள்ளை நடந்தது. இதில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதையடுத்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர், சீல் வைக்கப்பட்ட 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை நீலகிரி மாவட்ட கோர்ட்டில், நீதிபதி முருகனிடம் தாக்கல் செய்தனர். இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் போலீசார் தாக்கல் செய்த 316 சாட்சிகளின் வாக்குமூல நகலை வழங்க கோரி ஜித்தின் ஜாய் தரப்பில் வக்கீல் விஜயன் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் விசாரணை ஆவணங்களை வழங்க முடியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே நகல்கள் வழங்க முடியும் என்று கூறினார்.