மதுரை
வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு -மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
|வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு, மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு, மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
வருமான வரி சோதனை
வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த மே மாதம் வருமான வரி முறைகேடு செய்ததாக கரூரை சேர்ந்த அசோக்குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தோம். சோதனை நடந்த இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். நாங்கள் சோதனை செய்த வீடுகளின் உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம். வெளியே கூடியிருந்த நபர்கள் மோசமான வார்த்தைகளில் வருமான வரி துறையினரை பேசினர். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கூட்டத்தினர், வருமானவரித்துறையினரான எங்களை தாக்கியதோடு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
கூட்டம் அதிகரிக்கவே, அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த இடங்களை விட்டு வெளியேறினோம். மறுநாள் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உதவியுடன் சோதனையை தொடர்ந்தோம்.
ஒத்திவைப்பு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், தலைமறைவாக இருந்தவர்களுக்கும் கீழ்கோர்ட்டு ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 19 பேருக்கு ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எதிர்தரப்பினர் சார்பில் மூத்த வக்கீல் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.