< Back
மாநில செய்திகள்
விடுதலை சிகப்பி வீட்டிற்க்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மனு
மாநில செய்திகள்

விடுதலை சிகப்பி வீட்டிற்க்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மனு

தினத்தந்தி
|
11 May 2023 5:53 PM IST

விடுதலை சிகப்பிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மலக்குழி மரணங்கள்' என்ற தலைப்பில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்தார்.

அந்த கவிதை இந்து மதக்கடவுள்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி இந்து முன்னனி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ்வரன் என்ற விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கடவுளை அவமதிக்கும் வகையில் தான் பேசவில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அளிக்கப்பட்ட புகாரில் காவல்துறை தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுதலை சிகப்பிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விடுதலை சிகப்பிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விடுதலை சிகப்பியின் வீட்டை ஒரு லட்சம் பேர் சேர்ந்து முற்றுகையிடப் போவதாக மாவட்ட பா.ஜ.க. தலைவர் அறிவித்துள்ளதாகவும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விடுதலை சிகப்பி மற்றும் அவரது பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்